Auto ad

புதிய வரலாறு.. நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்! 24 மணி நேர கவுண்ட் டவுன் தொடக்கம்

சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

விண்வெளி துறையில் இந்தியா இன்னமும் வளர வேண்டும் என்றும், பல கோடி மக்கள் இப்போதும் வறுமையில் இருக்கும் நிலையில், எதற்காக இந்தியா விண்வெளித்துறைக்கு இவ்வளவு செலவு செய்கிறது? எனவும் அவ்வப்போது சில மேற்கு நாடுகள் கிண்டலாக கேள்வியெழுப்புவதுண்டு. ஆனால் கடந்த மாதம் 23ம் தேதி இஸ்ரோ செய்த தரமான சம்பவம், கேள்வியெழுப்பிய நாடுகளின் வாயை ஒட்டுமொத்தமாக அடைத்துவிட்டன. அதாவது நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த லேண்டரும் தரையிறங்கியது கிடையாது. விண்வெளி துறைக்கு முன்னோடியான ரஷ்யாவே இந்த மிஷனில் தோல்வியடைந்த நிலையில், இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 லேண்டர் பத்திரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த வெற்றிக்கு பின்னர், இஸ்ரோ தொடங்கும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இப்படி இருக்கையில்தான் தனது கனவு திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. இது இஸ்ரோவினுடைய கனவு திட்டம் மட்டும் கிடையாது, 120 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் 40 ஆண்டுக்கால ஏக்கமும் கூட. ககன்யான் என்பதுதான் இந்த திட்டத்தின் பெயர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். 

இந்தியா விண்வெளிக்கு சொந்தமாக, செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் அனுப்பியிருந்தாலும் மனிதர்கள் இதுவரை அனுப்பவில்லை. ஆனால் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா எனும் விமானப்படை வீரரை ரஷ்யா கடந்த 1984ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. சோவியத் ரஷ்யாதான் விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவுக்கு உற்ற நண்பன். இந்தியா போன்ற வளர்ந்து வந்த நாடுகளுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை தூண்ட இந்த நாடுகளிலிருந்து வீரர்களை தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்து செல்ல முன்வந்தது சோவியத் ரஷ்யா.
அப்படிதான் இந்தியா சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பறந்தார் ராகேஷ் ஷர்மா. அவர் பறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால் இன்னும் ஒரு இந்தியர் கூட விண்வெளிக்கு மீண்டும் போகவில்லை. இந்த 40 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு ககன்யான் திட்டம் நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை ஓட்டம் நாளை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த சோதனையில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலனை (Crew Module) தரையிலிருந்து 17 கி.மீ தொலைவுக்கு அனுப்பி, பத்திரமாக மீண்டும் பூமிக்கே கொண்டுவரப்படும். இந்த சோதனையில், மாதிரி கலன் வங்கக்கடலில் தரையிறங்கும். அங்கு ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையினர் மாதிரி கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள். இந்தச்சோதனைக்குடிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராகக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமார் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும். இந்த ககன்யான் திட்டம் வெற்றியடைந்துவிட்டால், 2040ம் ஆண்டில் மனிதர்களை இஸ்ரோ நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ககன்யான் சோதனைக்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது.



Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-countdown-to-the-test-of-gaganyaan-a-manned-space-probe-has-begun-549819.html

Post a Comment

0 Comments

Contact Form

Name

Email *

Message *